பூரியான் பாத்திஹாவும் ஜஹபர் சாதிக்கின் சமத்துவப்பாதையும்…

பூரியான் பாத்திஹாவும் ஜஹபர் சாதிக்கின் சமத்துவப்பாதையும்…



    ஜஹபர் சாதிக் அவுலியாவின் பூரியான் பாத்திஹா என்பது பல தமிழ் முஸ்லிம் குடும்பங்களில் வழிவழியாக வந்த மரபாக இன்றுவரைக்கும் இருக்கிறது. பூரியான் பாத்திஹாவிற்கு செய்யும் "பூரியான்" எனும் இனிப்பு, பேறுகால பாத்திஹா, நாகூர் ஆண்டவர் கந்தூரி, மீலாதுப் பெருநாள் என்று பல தமிழ் முஸ்லிம் பண்டிகைகளுடன் ஒன்றியதாகவும் இருந்து வருகிறது. ஆனால் ரஜப் 22இல் பயன்படுத்தும் மண்பாண்டங்களும் வெள்ளைத்துணியும் வேறந்த ஒரு பண்டிகைக்கும் செயல்படுத்துவது கிடையாது. அத்தகைய தனித்துவமும் சிறப்பும் வாய்ந்தது தான் பூரியான் பாத்திஹா ஓதுதல். 


    ஆனால் இது தமிழ் முஸ்லிம்கள் மட்டும் கொண்டாடுவது கிடையாது. தென் இந்திய தக்கனி (உருது) முஸ்லிம்களும், கிட்டதட்ட தமிழ் முஸ்லிம்கள் செய்யும் முறைகளுடன் அதே பூரியான் பாத்திஹாவை அனுசரிக்கிறார்கள். அவர்களில், ஜஹபர் சாதிக்கை ஆறாவது இமாமாக கொண்ட ஷியா முஸ்லிம்கள் இச்சடங்கிற்கு இன்னும் கூடுதலான சிறப்பளிக்கிறார்கள். 


    வட இந்தியாவையும் பாகிஸ்தானையும் நோக்கி செல்ல செல்ல, பூரியை விட "டிக்கி" எனும் இனிப்பு பிஸ்கட்டை தான் இன்னும் அதிகமாக காணலாம். சொல்லவேண்டும் என்றால், 'பூரி பாத்திஹா' என்பதை விட 'கூண்டே' என்றுதான் இச்சடங்கை அழைக்கிறார்கள் உருது மொழியில். ('கூண்டான்' என்றச்சொல் நேர்ச்சை வழங்கும் மண்பாண்டத்தையே குறிக்கிறது.) ஒரு காலத்தில், இந்த கூண்டே நடத்தும் ஷியா குடும்பங்களில் கண்டிப்பாகவே அஹ்லுஸ் சுன்னாஹ்வைச் சேர்ந்த நண்பர்களை அழைத்து, அவர்களுடன் இணைந்து பாத்திஹா ஓதி, ஜஹபர் சாதிக் கதையை படித்துவிட்டு சாப்பிடுவதே வழக்கமாக இருந்தது. ஆனால் காலபோக்கில் இந்நிலைமை மாறி, "இது இஸ்லாத்திற்கு முரணானது, ஷியாக்கள் உருவாக்கிய வழிகேடு, 'டிக்கி'யில் எச்சில் அல்லது முடி/ரத்தம் கலந்துவிடுவார்கள், பிள்ளைகளை வசீகரம் செய்துவிடுவார்கள்" என்று முணுமுணுக்கும் காற்றுகளெல்லாம் வடக்கில் வீச, முன்பிருந்த நல்லிணக்கம் என்பது பல ஊர்களில் வேருடன் வேறாக மறைந்து போனது. ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானிய பிரதமர் ஆன காலத்தில், ஒவ்வொரு ஷியா வீட்டிலும் ஓர் நபராவது ஷஹீதாக்கப்பட்டார். இதன் பிறகு கூண்டேவிற்கு விசாலமாகத் திறந்திருந்த பல கதவுகள், இப்பொழுதுவரை சற்று ஒருக்களிக்கபட்டே இருக்கிறது 


    ஆனால் ஜஹபர் சாதிக் அவுலியாவோ பாகுபாடற்றவராகவே வாழ்ந்தார். தந்தைவீட்டின்படி அலியாரின் வழித்தோன்றலாகவும், தாய்வீட்டின்படி அபி பகரின் வழித்தோன்றலாகவும் பிறந்தார். தனது உம்மத்தின் ஜாதி, குல, இன பேதங்களை உடைக்க, அடிமையாக்கபட்ட "ஹமீதா ஹாத்துன்" என்ற வட ஆப்ரிக்கப் பெண்மணியை விடுவித்து, அவளை மணமுடித்து, இல்முத்தீனும் ஃபிக்கும் கற்பித்து, அவள் மூலமாக தனது சமுதாயப் பெண்களின் கல்வியையும் உயற்றினார். அவள் வழியாக ஏழாவது இத்ன ஃஅஷரி ஷியா இமாமாக கருதப்படும் மூசா காழிமையும் பெற்றார். இந்த இமாம் காழிமும், ஹனஃபி மத்ஹபை உருவாக்கிய இமாம் அபு ஹனிஃபாவும், மற்றும் மாலிகி மத்ஹபை உருவாக்கிய இமாம் மாலிகும் ஜஹபர் சாதிக்கிடம் படித்தவர்கள். மேலும் இமாம் ஷாஃபஈ இமாம் மாலிக்கிடம் படித்தவர். ஆதலால் நான்கு மதாஹிபுகள்—ஒன்று ஷியா பிரிவைச் சேர்ந்த "ஜாஃபரி" மத்ஹபாகவும், மற்ற மூன்றும் அஹ்லுஸ் சுன்னாஹ்வைச் சேர்ந்ததாகவும்—ஜஹபர் சாதிக்குடன் நேரடி தொடர்புடையவை என்றே கூரலாம். (அஹ்லுஸ் சுன்னாஹ்வைச் சேர்ந்த ஹன்பலி மத்ஹப் மட்டும்தான் இதில் சேர்த்திக்கை இல்லை.) அக்காலத்தில் வாழ்ந்த பல இஸ்லாமிய அரிஞர்களை போலவே இவரும் மார்கம் மட்டும் அல்லாமல் விஞ்ஞானமும் நன்கறிந்தவர், குறிப்பாக வானியலில். ஐரோப்பியர்களுக்கு முன்பே, பூமி சூரியனை சுற்றுவதாகவும் அதே போல் தன்னை தானே சுற்றுகிறது என்பதை அறிந்தவர். 


    பல தரீகாக்களின் சில்சிலாக்களில் (குருபரம்பரைகளில்) இடம் பெற்று, சூஃபி ஞானச்சிந்தனையிலும் தனியிடம் உடையவராவார் இமாம் சாதிக். இவருடைய குர்ஆன் தஃப்சீருகள் (விளக்கங்கள்) ஹகாஇக் அத்-தஃப்சீர் எனும் சூஃபி நூலில் பதிவு செய்யபட்டிருக்கிறது. (ஆங்கிலத்தில் முன்னுரையுடன் "Spiritual Gems: The Mystical Quran Commentary Ascribed to Jafar as-Sadiq" என்ற தலைப்பில் கிடைக்கிறது.) இதிலுள்ள ஆச்சரியம் என்னவென்றால், சில இடங்களில் (ஷியா) இமாம்களைத் தவிர வேறெவரின் மூலமாலும் தீன்பாதையை அடைவது அசாத்தியம் என்றும், அவர்கள் மட்டுமே இஸ்லாத்தின் தலைவர்களாவர் என்றவர் கூரியதாக இருக்கிறது; மற்ற இடங்களில் முதல் மூன்று (அஹ்லுஸ் சுன்னாஹ்) கலிஃபாக்கள் உட்பட சஹாபாக்களின் பாதையில் நடந்து, அவர்கள் வாழ்ந்த முறையில் வாழவேண்டும் என்று கூறியிருக்கிறார் என்றும் இருக்கிறது. தற்போதைய மேற்குவர்கத்து பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு Islamic Studies ஆய்வாளர்களில் பெரும்பாலானோர் ஜஹபர் சாதிக் ஒரு ஷியாவாகவே இருந்தார், தன்னை ஷியாவாகத்தான் அடையாளப்படுத்திக் கொண்டார் என்ற தீர்மானத்தில் ஒற்றுமையாக இருக்கையில், அவர் ஸஹாபாக்களை பற்றி கூறிய வரி விநோதமாகத் தெரியலாம். இருப்பினும், அவர் மூன்று அஹ்லுஸ் சுன்னாஹ் மதாஹிப் தலைவர்களுக்கு பாடம் கற்பித்த காலத்தில், அவர்களின் நம்பிக்கைகளை துன்புறுத்தும் விதமாக அவர்களிடம் பேசியிருக்க வாய்ப்பில்லை. இதேபோல் அவரை ஞான குருவாக ஏற்றுக்கொண்ட சூஃபிகளிடம் தனது தனி கருத்துக்களை திணிக்காமல், அவர்களை அன்புடனும் கண்ணியத்துடனும் அவரவர் பாதையின்படியே உபதேசித்து வழிநடத்திருக்கிறார். இதுவே நாம் கொண்டாடும் பாரம்பரிய சூஃபி சிந்தனையின் சமத்துவ அடையாளமாகவும் இருக்கிறது. 



சடங்குகள் உருவான சூழல்… 


     பூரியான் பாத்திஹா ஓதுதல் என்பது கதிரி தரிக்காவின் வாயிலாக தமிழ் முஸ்லிம்களை வந்தடைந்ததா, அல்லது முஹர்ரம் சடங்குகளைப்போல் பிஜாப்பூருகள் போன்ற தக்கனி ஷியா படையெடுப்புகளின்பொழுது வந்து, பிறகு சூஃபிகளினால் அனுசரிக்கப்பட்டதா, அல்லது ஷியா படையெடுப்பின் பொழுது அதே சமையம் வந்த ஃபக்கீர் பிரிவுகளிடத்திலிருந்து வந்ததா, அல்லது பிறகு வந்த மற்ற உருது முஸ்லிம்களிலிருந்து வந்ததா என்று சரியாகத் தெரியவில்லை. ஓர் காலத்தில் (ஈரானில் சஃபவி ஆட்சியின்பொழுது வாழ்ந்த ஆலிம்கள் கொண்டுவந்த சூஃபி-எதிர்ப்பு கட்டமைப்புகளுக்கு முன்பு) ஷியா என்பது ஒரு விதமான சூஃபி/இர்ஃபானிய பிரிவாகத்தான் இருந்தது. இந்த சூழலில் உருவான சடங்குகளை சரியாக ஷியாவாகவும் அல்லது அஹ்லுஸ் சுன்னாஹ்வை சேர்ந்த ஸூஃபியாகவும் பிரிப்பதென்பது மிக கடினமான செயலாகும். இருப்பினும், தற்போது இரண்டு சமுதாயங்களுக்கிடையே பூரி பாத்திஹாவை குறித்த நம்பிக்கைகளில் சில நுணுக்கமான வேறுபாடுகள் உள்ளன. இதில் முக்கியமானதொன்று முஆவியா இபின் அபு சூபியானின் இறப்பும், அதை எப்படி கருதவேண்டும் என்பதில் இருக்கிறது. அலியாருக்கு எதிராக முஆவியா போர்தொடுத்ததினால், ஷியாக்கள் அவர் இழப்பை நன்நிகழ்வாக பார்க்கிறார்கள், ஜஹபர் சாதிக்கின் பாத்திஹாவுடன் சேர்ந்து பலர் கொண்டாடவும் செய்கிறார்கள். சில ஃபக்கீர் பிரிவுகளில் இதே நம்பிக்கை (மறைமுகமாக) இருந்தாலும், பெரும்பாலும் இன்றைய சுன்னாஹ் முஸ்லிம்கள் இந்நிகழ்வை பூரியான் பாத்திஹாவுடன் சேர்ப்பதில்லை. 


        முன்பு கூறியபடி தமிழ் முஸ்லிம்கள் உட்பட தென் இந்திய முஸ்லிம்கள் பொதுவாக பூரியான் பாத்திஹாவில் பயண்படுத்திய பொருட்களை வேறெந்த நாட்களிலும் உபயோகிக்க மாட்டார்கள். அவைகளை மூட்டையில் சுற்றி தனியாக ஓர் இடத்தில் வைத்துவிடுவார்கள். மேலும், நேர்ச்சையாக படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் எடுத்து செல்வதாகாது, மற்றவர்கள் வீட்டிற்க்கு வந்துதான் அதனை உண்ணவேண்டும் என்பதும் பலரின் ஐதீகமாக இருக்கிறது. இதில் இன்னும் ஒருசிலர், கையை கூட தோண்டி வைத்த குழியில் கழுவிவிட்டு, கழுவியதை உடனடியாக புதைத்துவிடுவர். இன்றைக்கு இதற்கான காரணம் பெரிதளவில் யாருக்கும் தெரியவில்லை. நான் கேட்டுப்பார்த்த இடங்களில், இப்பண்டிகை ஜஹபர் சாதிக்கின் காலத்தில் தடைசெய்யப்பட்டதாகவும், அதனால் இதை ரகசியமாக நிகழ்த்தும் சூழல் உருவானதாகவும் சொல்கிறார்கள். வரலாற்றின் பூர்வமாக நாம் பார்க்கும் பொழுது, அது மன்சூர் கலிஃபாவின் ஆட்சிப்பொழுதாக இருந்திருக்கிறது. உமய்யாக்களை வீழ்த்திய அப்பாசிகளுக்கு உதவியாளர்களாக இருந்த அலவிகள் (அலியாரின் வழியில் வந்தவர்கள்), கிலாஃபத்தின் அதிகாரத்தை ஜஹபர் சாதிக்கிற்கு அளிக்கவேண்டும் என்று கோரினார்கள். இதனை அல்-மன்சூர் எதிர்க்க, அலவிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் அப்பாஸிய ஆட்சியை எதிர்க்கத் தொடங்கினர். மக்கள், உலமாக்கள், அறிஞர்கள் என்று அனைவரின் அன்பையும் விசுவாசத்தையும் பெற்ற ஜஹபர் சாதிக்கை மன்சூர் விஷம் வைத்து கொல்லத் திட்டமிட்டு, அத்திட்டத்தை பூர்த்தியும் செய்தார். ஆதலால் ஜஹபர் சாதிக்கை பின்பற்றுதல் என்பது ஓர் காலத்தில்—குறிப்பாக அவர் வாழ்க்கையின் இறுதி காலங்களில்—உண்மையிலேயே கடினமாக இருந்திருக்கிறது. ஆனால் அக்காலத்தில் அவர்கள் என்ன சடங்குகள் நடத்திருப்பார்கள்,  அது எப்படி இருந்திருக்கும், பிறகு அது பெரும்பாலும் தென் ஆசியர்கள் பின்பற்றும் பூரியான் பாத்திஹா/கூண்டேவாக தோற்றம் கொண்டது என்பதற்கு கூடுதல் ஆய்வு தேவை படுகிறது.


மேலும் சில தகவல்கள்:


கதைகள்…


    உணவை பகிர்வதற்கு முன்பு ஒன்றிரண்டு கதைகள் படிப்பதும் வழக்கத்திலுண்டு. பலர் நபி ஜகரிய்யா மற்றும் அன்னை மரியமின் கதை படித்து, அதில் மரியமிற்கு அல்லாஹ் தன்னால் வழங்கிய உணவை கண்டு, அவளை வசீலாவாக்கி பிள்ளை வரம் பெற்று கொண்ட ஜகரிய்யாவை போல் தாங்களும் ஜஹபர் சாதிக்கை வசீலாவாக்கி அல்லாஹ்வின் மகிழ்ச்சியை பெற்றுக்கொள்வதாக நம்புகிறார்கள். மற்ற கதைகள் ஜஹபர் சாதிக்கை, அல்லது அவரை பின்பற்றுவோர்களை நேரடியாக குறிக்கிறது. மேலும், இச்சடங்கின் மீது நம்பிக்கையற்றவர்களுக்கு என்னவெல்லாம் நேரிடும் என்ற அச்சத்தையும் தூண்டும் விதமாக இருக்கிறது (சத்யநாராயண பூஜை கதைகளை போலவே…) இதில் ஒன்றை உதாரணமாக நான் பதிவின் இறுதியில் எழுதிருக்கிறேன்; வேண்டியவர்கள் வாசிக்கலாம். 


பூரியான்…


பூரியான்களில் பல வகைகள் உள்ளன. தேங்காய், முந்திரி, பாதாம்வைத்த வகையை "சோபே கி பூரி" என்று உருது மொழியில் அழைக்கிறார்கள். இதுவே பெரும்பாலும் தென்னிந்திய முஸ்லிம்களால் இவ்விழாவில் படைக்கப்படுகிறது. அதை விடுத்து மற்றவிதமான பூரியான்கள் அல்வா, அல்லது உருளைக்கிழங்கு, அல்லது கொண்டைக்கடலை போன்றவற்றை வைத்துத் தயாரிக்கப் படுகிறது. 

(தேங்காய், பாதாம், முந்திரியுடன் 'சோபே கி பூரி')


     இவைகளை இரண்டு சட்டிகளில் சமமாக வழங்குவதற்காக பொதுவாக 10, 12, 14, 22, 24 போன்ற இரட்டைபடை எண்களில்தான் பூரியான்கள் அமைக்கபடுகிறது. அஹ்லுஸ் சுன்னாஹ்வை சேர்நதோர் இதனை எப்படி விளக்குவார்கள் என்றுத் தெரியவில்லை; ஆதலால் ஷியா பார்வையை இங்கு பகிர்கிறேன்:


  • 10 என்றால் 5+5. 5 என்பது "பஞ்சதன் பாக்" என்று கருதப்படும் நபிகள் நாயகம் அவர்கள், அவரது மகளான ஃபாத்திமா நாச்சியார், அவளுடைய கணவன் அலியார் நாயகம், மற்றுமவர் பிள்ளைகளான ஹசன்-ஹுசைனார்.

  •  12 என்பது 12 இமாம்கள்: அலியார், ஹசனார், ஹுசைனார், ஜெய்னுலாபிதீன், முஹம்மது அல்-பாகிர், ஜஹபர் (ஜஃபர்) அச்-சாதிக், மூசா அல்-காழிம், அலி அர்-ரிழா, முஹம்மது அல்-ஜவாத், அலியுல் ஹாதி, ஹசனல் ஃஅஸ்கரி, முஹம்மது அல்-மஹ்தி.

  • 14 என்பது நபிகள் நாயகம் (1) மற்றும் ஃபாத்திமா நாச்சியார் (1)  + 12 இமாம்கள்

  • 22 என்பது ரஜப் 22 

  • 24 என்பது 12 + 12



மஜிலிசுகள்…


    தமிழ் முஸ்லிம்களைப் போன்ற சூஃபி பின்னணியுடைய சமுதாயங்கள் சிறப்பு திக்ர் மஜிலிஸ்கள் ஓதுவதை காணலாம். அதேபோல் ஷியாக்களும் மஜிலிஸ் நடத்துகிறார்கள், ஆனால் அதில் சில வித்தியாசங்கள் உள்ளன. திக்ருகள் என்று தனியாக ஏதும் ஓதுவதில்லை. குத்பாவிற்கு முன்பு உட்கார்ந்தபடி கவிதை தொகுப்புகளிருந்து ஒன்றை வாசித்து விட்டு, பிறகு எழுந்து நின்றபடி கஸீதாக்கள் படித்து அந்த மஜிலிசை முடிப்பது வழக்கம். இதனை "ஜஷன்" என்ற பெயரால் அழைப்பார்கள். 


லாஸ் ஏஞ்சல்ஸில் என் வீட்டு பூரியான் பாத்திஹா/கூண்டே:








கதை...


    “ஒரு ஏழை மரம் வெட்டுபவர் தனது குடும்பத்தை காப்பாற்ற கூடுதல் வருமானம் தேடி சீமைக்குச் சென்ன்றிருந்தார். ஆனால் பல மாதங்கள் கழிந்தும் பணமும் வராமல், கணவனையும் காணாத அந்த மரம் வெட்டுபவரின் மனைவி, ராஜ மந்திரியின் வீட்டில் வேலைசெய்யத் தொடங்கினார். அதில் வந்த வருமானமும் அவள் ஏழ்மையை தீர்க்கவில்லை. பிள்ளைகளின் பசியை தீர்க்க அல்லாஹ்விடம் மன்றாடிய மரம்வெட்டியின் மனைவி, அதே இரவு ஜஹபர் சாதிக் அவுலியாவை கனவில் கண்டார். அதில், அவர் தனது சீடர்களுக்கு ரஜபு மாதத்தின் சிறப்பை பற்றி சொல்லி, ரஜப் 22இல் மாவினால் இனிப்பு செய்து, அதனை 14 பாகங்களாக பிரித்து, மண் பாண்டங்களில் வைத்து அவர் பெயரில் பாத்திஹா ஓதினால் அல்லாஹ் அணைத்து துன்பங்களையும் நீக்குவான் என்று அவர்களுக்கு அறிவுரைத்தார். காலையில் எழுந்ததும் மரம்வெட்டியின் மனைவி, கனவின் படியே 14 பூரியான்கள் செய்து பாத்திஹா ஓதினாள். அவளது கணவனும் அதே நேரம் ஒரு மரத்தின் கீழ் ஒரு ரகசிய புதையலை கண்டுபிடித்து, அதிலுள்ள செல்வங்களை பெற்றுக்கொண்டு அவர் ஊருக்கு மீண்டும் திரும்பினார். அல்லாஹ்வின் ஆசையினால் அந்த தம்பதியும் அச்செல்வத்தை வைத்து ஒரு மாளிகை கட்டினார்கள். 


    தனது வீட்டில் வேலை செய்தவள் அவளை விட செல்வந்தரானதை கண்ட ராஜமந்திரியின் மனைவி, ஜஹபர் சாதிக்கின் பாத்திஹாவினால் இதெல்லாம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்தாள். மேலும், அவள் அஹ்லு பய்த்துக்கள் மற்றும் அவுலியாக்களின் வஸீலாவின்மீது நம்பிக்கையற்றவராகவும் இருந்தாள். இது போதாதென்று, மரம்வெட்டியின் மனைவியின்மீது போலி திருட்டுவழக்கை சாற்றி அவளது செல்வத்தை பறிக்க முனைந்தாள். ஆனால் அதற்குள் இன்னொருவர் ராஜமந்திரியின் மீது பொய்வழக்கு சாற்றி, அதனால் மன்னர் அந்த மந்திரியையும் மனைவியையும் நாடுகடத்த உத்தரவிட்டார். தனது செல்வத்தையும் அந்தஸ்தையும் இழந்த மந்திரியும் அவரது மனைவியும் அல்லும் பகலுமாக ஊரின் எல்லையை நோக்கி நடந்தார்கள். அப்பொழுது ஒரு முலாம்பழ தோப்பை கண்டதும் மந்திரி அவர் மனைவியிடம் கூறினார்:


    "அல்ஹம்துலில்லாஹ்! நம் தாகமும் பசியுமாக அலைவதைக் கண்ட இறைவன் நம்மை இன்னும் கைவிடவில்லை. இத்தோப்பிலுள்ள முலாம்பழமொன்றை யாரும் பார்ப்பதற்குமுன் கோணியில் எடுத்துக்கொண்டு வேகமாக செல்வோம்."


    அதே நேரத்தில் அரசக்கோட்டையிலிருந்து வேட்டையாட காட்டிற்கு சென்றிருந்த இளவரசன், பல மணிநேரங்களாயினும் வீடுதிரும்பவில்லை. இதைக்கண்ட மன்னர், தான் நாடுகடத்திய மந்திரி தன் மகனை ஏதாவது செய்திருப்பானோ என்ற வறுத்தத்திற்கு ஆளாகி, தனது வீரர்களை மந்திரியைத் தேடிசெல்ல கட்டளையிட்டார். 


    அந்த இரவு மந்திரியும் அவரது மனைவியும் அவர்கள் பறித்த முலாம்பழத்தை சாப்பிட ஆயத்தமானார்கள். ஆனால் அதை கோணியிலிருந்து எடுப்பதற்கு முன்பே மன்னரின் வீரர்கள் அவர்களை கைதுசெய்து மீண்டும் ராஜமாளிகைக்கே திரும்பி கூட்டிச்சென்றார்கள். மன்னரும் கோணிப்பையை திறந்து காட்ட மந்திரியிடம் உத்தரவிட, அப்படியே தனது நேர்மையின்மீது நம்பிக்கையுடன் மந்திரியும் திறந்து காட்டினார் — ஆனால் அப்பொழுது அக்கோணிப்பையிலிருந்தது முலாம்பழமல்ல, இளவரசனின் துண்டிக்கப்பட்டத் தலை மட்டுமே! 


    துயரத்தை தாங்க இயலாத மன்னர், மந்திரியையும் அவரது மனைவியையும் மேலும் விசாரிக்காமல் அவர்களுக்கு அதிகாலையில் மரணதண்டனை வழங்கப்படும் என்று கட்டளையிட்டார். அன்றிரவு சிறையில் புழுங்கிய மந்திரி, தனது மனைவியைப் பார்த்துச் சொன்னார், 


    "நமக்கு மட்டும் ஏன் இந்நிலைமை? நாமென்ன பாவம் செய்தோம்? நான் மன்னரிடம் இத்தனை வருடங்களாக நேர்மையும் தர்மமுமாகத் தானே இருந்தேன்!" என்று கதறி அழ, அவரது மனைவியும் தனது சூழ்ச்சியை நினைத்து புலம்பினாள்: 


    "அந்த மரம்வெட்டியின் மனைவியின் அமல்களை நம்பாதது மட்டும் போதாதென்று, பொறாமை கண்களை மறைக்க அவளின் சொத்தையும் பறிக்க முயன்றேனே! இதனால்தான் நம்மக்கிந்த கதி...!" 


    இருவரும் இரவெல்லாம் அழுது புலம்பி இறைவனிடம் மன்றாட, கதிரவனொளியும் சிறைச்சாலைக் கம்பிகளைத் தட்ட, மந்திரியின் மனைவிக்கு திடீரென்று மரம்வெட்டியின் மனைவி ஜஹபர் சாதிக் பெயரில் செய்த பாத்திஹா சடங்கு நினைவிற்கு வந்தது. அவர்கள் நிரபராதிகளாக நிரூபிக்கப் பட்டு, மரண தண்டனையிலிருந்து விடிவிக்கப்பட்டால், அதே சடங்கை நடத்துவதாக வற்றிய கண்களுடன் அல்லாஹ்விடம் சத்தியம்செய்தாள் மந்திரியின் மனைவி. 


    அப்படிச்சொன்னதுமே இளவரசன் தனது குதிரையும் வேட்டைநாய்களுடனும் கோட்டையின் வாயில் நுழைந்தார். வேட்டையாடிய களிப்பிநால் காட்டிற்கு பக்கத்திலேயே உள்ள மாளிகையில் தங்கிவிட்டதாக இளவரசன் சொல்ல, உயிருடன் தனது மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மன்னர் மீண்டும் அதே கோணிப்பையை கையிலெடுத்தார். அப்பொழுது அதற்குள்ளிருந்த முலாம்பழத்தைக் கண்டு, தான் தவறுதலாக சாற்றிய தண்டனையை பின்வாங்கி, மந்திரியையும் அவரது மனைவியையும் விடுவித்தார். சில காலங்களில், மந்திரியின்மீதிருந்த குற்றச்சாட்டும் போலியாக நிரூபிக்கப்பட்டது. மீண்டும் அரசபையில் பதவி பெற்று, மந்திரியும் அவரது மனைவியும் அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஒரு முறை ஜஹபர் சாதிக்கின் பாத்திஹா சடங்கை மகிழ்ச்சியுடன் நிகழ்த்தி, பூரண முஃமின்களாக வாழ்ந்தனர்.”



(Edit - Feb 5 2024 : இக்கதைக்கு "விறகு வெட்டி கிசா"வென்ற தமிழ்ப்பெயர் உள்ளதென்றத் தகவலளித்த ஜாஃபர் சாதிக் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. மேலும் தக்கனி முஸ்லிம்களை குறித்த சில விவரங்களுக்கு சென்னையைச் சேர்ந்த ஃபசீஹா ஸஹ்ரா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த முபஷிர் அலி கான் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.)

(Edit - Feb 5 2024 : "விறகுவெட்டியார் கிஸ்ஸா"வின் தமிழ் மொழிபெயர்ப்பொன்று 1994இல் சென்னை, திருவல்லிக்கேணியில் ஹாஜி எம். ஏ. ஷாஹுல் ஹமீது அண்டு சன்ஸ் அவர்களால் பதிக்கப்பட்டிருக்கிறது. இதனுள் பாத்திஹா ஓதும் முறையும் உள்ளது. இதை பார்வைக்கு கொண்டுவந்த டாக்டர் மொஹம்மத் சஃபி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

அதன் pdf ஐ தமிழ் டிஜிட்டல் லைப்ரரியின் மூலம் பெற்றுக்கொள்ள: link )

Comments